சிறந்த வாசிப்புக்கு கந்தர் சஷ்டி கவச பாடல் மெடில்/ராகத்தில் படிக்கவும்/பாடவும்
முருகனின் சிறப்பு அதுவே காப்பு
நூறு கோடி தேவர்கள் வதைப்பட
நீதி நிலைத்திட அன்னையின் வேலுடன்
ஆறுமுகத்தவன் மயிலில் புறப்பட
ஆறாச் சினத்துடன் சூரனை அழித்தான்
நூறு தலைமுறை எம்குலக் காவலன்
நித்தம் நினைத்திட அருள் செய் வேலவ! (1)
கார்மேகம் போல் கருணை பொழிந்திட
குழந்தைவேலனால் கவலைகள் கலைந்திட
போர்குணமிருக்கும் பகையென வருமெனில்
பகைவரும் பயத்தினில் குமரனை வணங்கிட
பார்க்கும் பன்னிரு கண்கள் அடியனை
பாரியாள் வள்ளி தேவசேனையுடன். (2)
திருச்செந்தூர் விரத யாத்திரை
நீறும் சந்தனமும் நெற்றியில் நிறைந்திட
நடந்தே செந்தூர் விரைந்தே வருவோம்
நீரும் மோரும் வழியினில் பருகிட
நாவும் சொல்லும் நின் பெயர் இனித்திட
தேரும் உடம்பும் கயிற்றால் இணைந்திட
தாமதமின்றி செந்தூர் வருவோம். (3)
செழித்திடும் வயல்கள் இருபுறம் வழியே
சாலையின் ஓரம் பகலும் இரவும்
தெளிந்த பொருனையில் அங்கம் துலக்கிட
தோள்களிரண்டும் காவடி சுமக்க
வழியினில் சுடும் வெயில் பாதங்கள் நோவும்
வடிவேலென்றால் வேதனை தீரும். (4)
திருடன் முன்வந்தான் களவாடிடவே
திருக்கை வேலுடன் விரட்டி துரத்திட
மருதகிரி வாழ் மயில்வாகனனே
மாலை கழுத்துடன் மங்கலச் சொல்லுடன்
வருவோம் செந்தூர் விரதமிருந்தே
வருவோம் செந்தூர் செந்திலைக் காண! (5)
சொந்தம் அவனே சுற்றம் அவனே
சரவண குகனிவன் இல்லாதோர்க்கு
செந்தூர் அடைந்து கோபுரம் கண்டிட
செய்த பாவங்கள் சிதறி போய்விட
கந்தர் சஷ்டி கவசத்தைப் பாடிட
கடும் பிணியனைத்தும் கரைந்தே ஓடிடும் ! (6)
நிந்திக்கும் கூட்டம்
வறுமையில் வாடும் ஏழையின் மனதில்
வன்மத்தை விதைக்கும் வஞ்சகர் கூட்டம்
கறுப்பர் கூட்டம் கயவர்கள் கூட்டம்
கட்டியத்தாரமும் மகளும் ஒன்றாம்
வெறுப்பை பரப்பும் அறிவிலிக் கழகம்
வக்கிரப் புத்தியாம் கலியுக உச்சம்! (7)
நிந்திப்பவர்களை தண்டித்துத் திருத்த முருகனை அழைத்தல்
கோடி கோடி பக்தர்கள் கோடி
கடலையும் தாண்டி பக்தர்கள் கோடி
கோடி கோடி புண்பட்ட மனமிங்கு
கோபம் தீரா அடியார்கள் கோடி
வாடி வாடி வருந்திய மனமிங்கு
வடிவேல் உன்னை ஒரு பிழை சொன்னால். (8)
கூடி கூடி அனைவரும் கூடி
சஷ்டி கவசம் ஒன்றாய் ஒலித்திட
நாடி நாடி நல்வினை நாடி
நல்வேல் கொண்ட சரவண பவனே
ஆடி ஆடி காவடி ஆடி
ஆனந்த முருகா வருக வருக! (9)
கந்தா குகனே கருணையின் உருவே
கொடியவன் எண்ணம் பொடிப் பொடியாக
நிந்திக்கும் கூட்டம் சந்திக்கும் துயரம்
நினைவினில் வந்தால் கைகால் நடுங்கிட
எந்தை முருகனை எதிர்த்தவன் திருந்திட
எங்கள் இறைவனாம் சண்முகா வருக! (10)
– சுதர்சன ஸ்ரீநிவாசன்
Image Source: Google