கடந்த ஆண்டு 2019, பெல்ஜியம் நாட்டில் வேலை நிமித்தமாக வாழ்ந்து வந்த காலக்கட்டமது. இந்தியன் வெளிநாட்டில் வேலைப் பார்க்கிறான் என்றாலே தாய்நாட்டு பாசம் சற்றே அதிகமாகத் தான் இருக்கும். கால்கள் அந்நிய மண்ணில் நடந்தாலும் மனமோ தாயகத்தைச் சுற்றி வரும். இப்படி இருக்கையில் வேலை செய்யும் அலுவலகத்தில் ஜூன் மாதம் எங்கள் குழு லியர்(Lier) எனும் சிறிய‌ டவுனுக்குச்(கிராமம் என்றும் வைத்து கொள்ளலாம்) சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டிருந்தோம்.

ஆளுக்கொரு மிதிவண்டியுடன் சுற்ற ஆரம்பித்தோம். இயற்கை எழில், செல்லும் வழித்தோரும் நிறைந்திருந்தன.நம் ஊரில் எங்கும் சீமைக் கருவேல செடியைப் பார்த்த எனக்கு இது உற்சாகமளித்தது. ஆனால் என் இந்தியாவையும் இதைவிட பசுமையாக மாற்ற வேண்டும் என்ற ஆசை தோன்றிற்று. என்னுடனே சில தமிழ் பேசும் அலுவலக நண்பர்கள் வந்தனர். அந்நாட்டைச் சேர்ந்தவர்களும் உடனிருந்தனர். அவர்களுக்குமே அது தான் முதல் முறை லியர்க்கு(Lier) வருவது.சுற்றுலாப் பயணிகள் அதிகம் வராத இடமது. இங்கு என்ன இருக்கப் போகிறது என்றே  சிம்மர் கோபுரம்(Zimmer Tower) என்ற இடத்துக்கு வந்தோம். அங்கே ஆச்சரியமான ஒன்றைக் கண்டோம்.அப்படி என்னத்தான் பார்திருபீங்க ? அதை சொல்லும் முன், சிம்மர் கோபுரம்(Zimmer tower) பற்றிப் பார்த்து விடுவோம். அது ஒரு மணிக்கூண்டு. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த காவல் கோபுரத்தை 1930ல் லூயிஸ் சிம்மர் எனும் மனிதர் மணிக்கூண்டாக மாற்றுகிறார். இவர் 1888ல் பிறந்து 1970ல் மறைந்தவர். விண்வெளி மற்றும் கடிகார மேதையாக(ஆம் 24 பட சூர்யாவைப் போல்) திகழ்ந்தவர்.

இந்த டவரில் பல விதமான கடிகாரங்கள் இருக்கிறது. மணிக்காட்டி, வாரக்காட்டி, மாதக்காட்டி, லியர்(Lier) நகர கடலலைக்காட்டி, இராசிக்காட்டி, கால பருவனிலைக்காட்டி, சூரிய மற்றும் சந்திரச் சுழற்சியை மய்யம் கொண்ட கடிகாரங்கள் எனப் பல வகையுண்டு. எல்லாமே தொடர்முறையில்(அனலாக்) வடிவமைக்கப்பட்டது, தற்போதுள்ளதுப் போல் எண்முறை(டிஜிட்டல்) அல்ல. நுண் பாகங்கள் கொண்டு தானியங்குகிறது.இதனை வடிவமைக்க அதிக பொறுமையும் கவனமும் தேவை.

இப்படிப் பட்ட டவரைச் சுற்றிப் பார்க்கும் பொழுது, ஒரு இடத்தில் உலக நேரங்களைக் குறிக்க ஒரு பெரிய வட்ட வடிவில் சின்ன சின்ன மணிக்காட்டிகள் இருந்தது. அதன் மய்யத்தில் க்ரீன்விட்ச் இடை நிலை நேரத்துடன் ஒரு மணிக்காட்டிஇருந்தது. அதில் ஆச்சரியமாக‌ இந்தியா மணிக்காட்டியில் தமிழ் எண்களுடன் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழ் எண்கள் எங்களுக்கே பரிட்சியமில்லை. வெட்கினோம்,ஆனால் வெளிநாட்டவன் முன்பு சொல்ல முடியுமா ? சமாளித்தோம், உண்மையில் புதித‌யாய் கற்றுக்கொண்டோம். சந்ததிச் சாக்கில் தமிழின் பெருமையையும் சொன்னோம்.அப்பொழுது அந்நாட்டு நண்பர்களிடம் நாங்கள் செய்த அலப்பறைச் சொல்லி மாளாது. தமிழ் எண் பெரிதும் பயன்பாட்டில் இல்லை என்றாலும் அதைத் தான் பொறிக்க வேண்டும் என்று எங்கோ இருந்தச் சிம்மருக்குத் தோன்றியிருக்கிறது அல்லது சொல்லப்பட்டிருக்கிறது. அத்தோடு முடிந்ததா இல்லை.

டவரின் கீழ் பகுதியில் ஒரு கண்காட்சி அறை இருந்தது. அதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற பொம்மை இருந்தது.ஆம் ஆடை அடையாளங்கள் அவரை நினைவில் கொண்டுவந்து நிறுத்தியது. ஒரு வேலை அவர் ஐரோப்பாவில் இருந்தப் பொழுது வந்திருக்கலாம். அது மட்டுமின்றி ஒரு கைக்கடிகாரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் புகைப்படமும் இருந்தது. சிம்மர் செய்த கைக்கடிகாரம் போல் இல்லை, பிற்காலத்தில் வைத்திருக்கலாம். யாருக்குத் தெரியும் மக்கள் திலகம் சிம்மரையும் கவர்ந்திருக்கலாம், யாருக்குத்தான் அவரைப் பிடிக்காது. சிம்மர் இறந்தது 1970ல் என்பது குறிப்பிடத்தக்கது.எதோ ஒரு தமிழன் பெரும் துணையாய் இருந்திருக்க வேண்டும் அல்லது அங்கு வாழ்ந்தாவது இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி. நாங்கள் விசாரித்தப் பொழுது அப்படி எந்த தகவலும் தெரியவில்லை. தெரியாதென்றே பதில் வந்தது. உலக யுத்தக் காலகட்டத்தில் இருந்த யாரேனும் இங்கையேத் தங்கி இருந்திருக்கலாம். இலங்கைத் தமிழாராய் கூட இருக்க வாய்ப்புகள் அதிகம். யாராக இருந்தாலும் தமிழ் ஆர்வம் கொண்ட ஒருவராகத்தான் இருக்க வேண்டும். எனினும், உண்மைத் தெரியாத வரையில் ஊகமே இது.

அன்று நான் மட்டுமல்ல என்னுடன் வந்த தமிழ் நண்பர்கள் அனைவரும் பெருமைக்கொண்டோம்.இத்தனைக்கும் எங்களில் ஒரு முஸ்லிம், ஒரு கிருத்துவர், மீதி இந்துக்களில் எல்லாம் வெவ்வேறு பின்புலத்தைச் சேர்ந்தவர்கள். எல்லோருக்கும் ஒரே பெருமை நம் மொழியையும் நாட்டையும் பற்றி அந்நாட்டவர்களுக்குச் சொல்வதும் வழக்கத்தில் இல்லாத தமிழெண்களை வெளிநாட்டுக் கிராமத்தில் பார்ப்பதுமாக இருந்தது. நாங்கள் எதுவும் செய்யவில்லை, இப்படி தமிழன் தன்னலமின்றி செல்லும் வழியெல்லாம் தன் பங்கை நிறைவறச் செய்யதே சென்று இருக்கிறான்.உலகம் முழுதும் இருக்கும் தமிழ்ச் சமூகம் இன்றும் தான் வந்த பாதையைப் பார்த்தால் பிரமிப்பு தான். தமிழால் தமிழனால் இந்தியா பெருமை கொள்ளச் செய்ய வேண்டும், இந்தியன் என்பதில் தமிழன் பெருமைக் கொள்ள வேண்டும்.

“வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!”

– சுதர்சன ஸ்ரீநிவாசன்

Image Source: All rights reserved to Viruvasan@wordpress.com

Copyrighted.com Registered & Protectedhttps://static.copyrighted.com/badges/helper.js

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s